புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பளிப்பதில் தயக்கம் காட்டி வருவது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காட்டு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டம் அடுத்த தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே அமலுக்கு வரும் என்றாலும், சட்டம் நிறைவேற்றிய பிறகும் பெண்களுக்குப் போதிய பங்களிப்பை அரசியல் கட்சிகள் வழங்காதது கண்டறியப்பட்டு உள்ளது.
ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) நடத்திய ஆய்வில் அந்தத் தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்களை அது வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியிட்டது.
சட்டம் நிறைவேற்றப்பட்ட மறு ஆண்டே, அதாவது 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 9.6 விழுக்காட்டுப் பெண்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் களமிறக்கிய 8,360 வேட்பாளர்களில் 800 பேர் (9.6%) மட்டுமே பெண்கள். அத்துடன், நாடு முழுவதுமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளில் (28%) ஒரு பெண்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.
அந்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலுடன் மாநிலச் சட்டமன்றம் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தம் 51,708 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அவர்களில் 5,095 பேர் மட்டுமே பெண்கள். இது 10 விழுக்காட்டுக்கும் குறைவு. இதன் மூலம் அரசியலில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் கையாள்வதில் ஆண் ஆதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களின் தயக்கம் பிரதிபலிப்பதாக ஏடிஆர் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேறியது முதல் இதுவரை 20 மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசச் சட்டமன்றங்களுக்கான தேர்தலில் 31,429 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 3,273 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள். அது மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் 10.2 விழுக்காடு.
மொத்தமாக, 2023க்குப் பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பெண் வேட்பாளர்களின் பங்கேற்பு விகிதம் 14 விழுக்காட்டைத் தாண்டவில்லை.
ஆக அதிகமான பெண் வேட்பாளர்களைக் களமிறக்கிய மாநிலமாக ஒடிசா திகழ்கிறது. 2024 சட்டமன்றத் தேர்தலில் அந்த மாநிலத்தில் 13.9 விழுக்காட்டுப் பெண்கள் போட்டியிட்டனர். டெல்லியில் 13.7 விழுக்காட்டினரும் புதுச்சேரியில் 13.6 விழுக்காட்டினரும் பெண் வேட்பாளர்களாக இருந்தனர்.
நாட்டிலேயே குறைவான பெண் வேட்பாளர்களைக் கொண்ட மாநிலங்களாக அருணாச்சலப் பிரதேசமும் ஜம்மு காஷ்மீரும் உள்ளன. அந்த மாநிலங்களின் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் வெறும் 4.9 விழுக்காட்டினரே பெண்கள்.
பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 13 விழுக்காட்டுக்கும் 16 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட விகிதத்திலேயே பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தன. அதே நேரம் மாநிலக் கட்சிகள் சில, அதிகமான பெண்களுக்கு வாய்ப்பளித்தன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி 50%, பிஜு ஜனதா தளம் 33%, ராஷ்டிரிய ஜனதா தளம் 29% திரிணாமூல் காங்கிரஸ் 25% எனப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

