மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு

2 mins read
28a5a4be-82f9-423f-87fb-825fa55a39f2
வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்குக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர். - படம்: இபிஏ

மும்பை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் திங்கட்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

அந்த மாநிலங்களில் புதன்கிழமை(நவம்பர் 20) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன. முடிவுகள் 23ஆம் தேதி வெளியாகின்றன.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் பிரசாரம் செய்தனர்.

மகா விகாஸ் அகாடி கூட்டணியை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும் சிவ சேனா (ஷிண்டே அணி) 81 இடங்களிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனா (உத்தவ் அணி) 95 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பஜகவின் ஒற்றுமையே பலம் என்ற கோஷம் இந்த தேர்தலில் பலமாக ஒலிக்கிறது. இதனால் வாக்காளர்களை மத ரீதியாக மகாயுதி கூட்டணி பிரிப்பதாக மகா விகாஸ் அகாடி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் காங்கிரசுக்கு ‘நோ’ சொல்லுங்கள் என்ற முழக்கத்தை பாஜக எழுப்பியது.

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம், சமூக நீதி மற்றும் அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்” என கூறி மகா விகாஸ் அகாடி கூட்டணி பிரசாரம் செய்தது.

ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் மகாயுதி கூட்டணியும் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நம்பிக்கையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியும் உள்ளன.

ஜார்க்கண்டில் 2ஆம் கட்டத் தேர்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகச் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இங்குள்ள 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

எஞ்சியுள்ள தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்