அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின் தொகுதியில் கவனம் செலுத்தும் பொன்முடி

2 mins read
1fef1f5e-7393-48f5-97c0-bcd038cd5165
முன்னாள் அமைச்சர் பொன்முடி. - படம்: ஊடகம்

சென்னை: சர்ச்சை பேச்சு காரணமாக அவரது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் பொன்முடி. இந் நிலையில், இப்போது தனது திருக்கோவிலூர் தொகுதி சார்ந்த நிகழ்வுகளிலும் தொகுதி மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அமைச்சராக இருந்த பொன்முடியின் சர்ச்சை பேச்சுகளால் கோபமடைந்த திமுக தலைமை அவரது துணை பொதுச் செயலாளர் பதவியை உடனே பறித்தது. அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என பொன்முடிக்கு எதிராக அதிமுக, பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். அழுத்தம் அதிகரிக்கவே திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பொன்முடி தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

அது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் சில நாள்கள் கட்சி, பொது நிகழ்வுகளில் பொன்முடி கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இது இப்படியே போனால் தனக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விடும் என்ற நிலையில் தற்பொழுது அவர் சட்டமன்ற உறுப்பினராக தனது திருக்கோவிலூர் தொகுதி சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொன்முடி வழங்கினார்.

அதே நாளில் விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கக் கொடியை ஏற்றி வைத்து மே தின வாழ்த்து தெரிவித்தார்.

மே 2ஆம் தேதி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பொன்முடி துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லை என்பதால் மே 4ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

மே 5ஆம் தேதி திருக்கோயிலூர் தொகுதி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் துக்க நிகழ்வில் கலந்துகொண்ட பொன்முடி, தமிழக அரசின் உதவித் தொகைக்கான காசோ[Ϟ]லையையும் அளித்தார்.

அனைத்துப் பொறுப்புகளும் கைவிட்டு போன நிலையில், தொகுதி நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறார் பொன்முடி என்கிறார்கள் திமுகவினர்.

குறிப்புச் சொற்கள்