இடுக்கி: பதின்ம வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளையர் மூவருக்கு இந்தியாவின் கேரள மாநிலம், தேவிகுளம் விரைவு நீதிமன்றம் மொத்தம் 90 ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது.
பல்வேறு பிரிவுகளின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனை அனைத்தையும் அவர்கள் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, அம்மூவரும் 25 ஆண்டுகளுக்குக் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அத்துடன், அவர்களுக்கு ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்தொகையைப் பாதிக்கப்பட்ட 14 வயதுச் சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அச்சிறுமி மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் குற்றவாளிகள் மூவரும் மேலும் எட்டு மாதங்களைச் சிறையில் கழிக்க நேரிடும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுகந்த், 20, சிவகுமார், 21, கேரளத்தின் பூப்பாறையைச் சேர்ந்த சாமுவேல் என்ற ஷியாம், 21, ஆகிய மூவரும் இவ்வழக்கின் குற்றவாளிகள். குற்றம் சாட்டப்பட்ட நான்காவது ஆடவர் சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய சிறார் இருவர், தொடுபுழாவில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வர்.
பூப்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் 2022 மே 29ஆம் தேதி அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.