புதுடெல்லி: தொகுதி மறுவரையறைக்கு முன்னதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவேண்டும். விகிதாசார அடிப்படையிலான அதிகரிப்பு என்பது இழப்பிலேயே முடிவடையக்கூடும் என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் வேளையில், பிரதமர் மோடி நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்றத் துடிக்கிறார்.
“இந்த அவசரத்திற்கான காரணம் அரசியல் ஆதாயம் தேடுவதும் எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதுமாகும். அரசியல் அமைப்பில் விரிவான மாற்றங்களைத் திணிப்பதற்கான அவசரத்திற்கு வேறு எந்த நியாயமும் இல்லை,” என்றார் திருவாட்டி சோனியா.
“இந்தச் செயல்முறை ஆழமான குறைபாடுகளைக் கொண்டது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினையன்று. உண்மையான பிரச்சினை தொகுதி வரையறைதான்,” என்று அவர் சுட்டினார்.
தொகுதி மறுவரையறை குறித்த மோடியின் உத்தரவாதம்
அதேவேளையில், தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை எந்த மாநிலத்துக்கும் அநீதியோ பாகுபாடோ இருக்காது எனப் பிரதமர் மோடி வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்குப் பாதிப்பு இருக்காது. மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இல்லை. தொகுதி மறுவரையறை, குறித்த சந்தேகங்களுக்கு அமித் ஷா விளக்கம் அளித்துவிட்டார் என்றார் அவர்.

