புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஆபாசக் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக ‘கூகல்’, ‘யூடியூப்’ நிறுவனங்களிடம் நான்கு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நட்சத்திரத் தம்பதியர் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
தங்களுடைய புகைப்படங்களைப் பயன்படுத்தி, ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் இந்த ஆபாசக் காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவை யூடியூப் மூலம் பரப்பப்பட்டுள்ளன என்றும் இருவரும் சாடியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், யூடியூப் தளத்தில் உள்ள தங்களைப் பற்றிய போலி ஆபாசக் காணொளிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தி உள்ளனர்.
“எங்களுடைய குரல்கள், புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் காணொளிகள் குறிப்பிட்ட ஒரு யூடியூப் ஒளிவழியில் இதுவரை 1.65 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இதில் இந்தி நடிகர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது போன்று சித்திரிக்கும் காணொளிகள் ‘ஏஐ’ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.