அமராவதி: ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டது குறித்து அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காக்கிநாடா துறைமுகம் வழியாக நியாய விலைக்கடை அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல்காரர்களின் கூடாரமாகி விட்டது. இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் 1,064 டன் அரிசி மூட்டைகளை பவன்கல்யாண் ஆய்வு செய்தார். காக்கிநாடா துறைமுகத்தில் நடக்கும் அரிசி கடத்தல் குறித்து ஆந்திர மாநில உணவு, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் நாதேள்ளா மனோகர் தனக்குத் தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“நான் காக்கிநாடா துறைமுகத்தில் நடக்கும் நியாயவிலைக் கடை அரிசி கடத்தலைத் தடுக்க வந்தேன். கடந்த ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது. அது இன்னும் தொடர்வதாக நான் எண்ணுகிறேன். இந்தத் துறைமுகம் அனைவருக்கும் இலவசம் போல் தெரிகிறது. இவ்விடத்திற்கு வந்துசெல்வோர் குறித்தும் நடக்கும் போக்குவரத்து குறித்தும் விவரங்கள் ஏதுமில்லை,” என்று தனது ‘எக்ஸ்’ பதிவில் பவன் கல்யாண் குறிப்பிட்டார்.
“இன்று ஆந்திர அரசாங்கத்திற்குச் சொந்தமான அரிசி கடத்தப்படுகிறது, நாளை வெடிமருந்து அல்லது வெடுகுண்டு தயாரிப்பதற்கான பொருள்கள் இறக்குமதியாகலாம். குற்றவாளிகள் அரிசி கடத்தலை நிறுத்துவார்களா? மும்பை குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நாட்டில் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளன. மேலும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல முக்கிய நிறுவனங்கள் உள்ளன. எனவே, நாட்டின் நலனுக்காக, நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று தனது பதிவில் கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தனது ஆய்வின்போது மாவட்ட, துறைமுக அதிகாரிகளின் செயலற்ற தன்மை, துறைமுக நிர்வாக குறைபாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.