புதுடெல்லி: இந்தியப் பயணத்தின்போது சில ஆடவர்களால் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து போர்ச்சுகல் நாட்டு இளம்பெண் ஒருவர் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அந்த சமூக ஊடகப் பதிவு பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஐனஸ் பாரியா என்ற அந்தப் பெண் தமது தோழியுடன் இந்தியாவில் மேற்கொண்ட ஒரு ரயில் பயணத்தின்போது ஆடவர்கள் தங்களுக்குத் தொல்லை தந்ததாக சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் அந்தப் பெண் அந்த வகையில் அண்மையில் இந்தியா வந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் இந்திய ரயில் ஒன்றில் 3ஆம் வகுப்பு குளிரூட்டி வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தோம். எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால் வழக்கமாக அந்த வகுப்புப் பெட்டியில் நாங்கள் பயணம் செய்வோம்.
“ஆனால் இந்த முறை எங்கள் இருக்கைக்கு எதிரில் சில ஆடவர்கள் அமர்ந்து கொண்டு நீண்ட நேரமாக எங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“அது எங்களைச் சங்கடப்படுத்தியது. ஒருநேரம் நான் கழிவறையை உபயோகிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த ஆடவர்களை கடந்து செல்ல வேண்டும் என்பதால், எங்கள் இருக்கைக்கு அருகில் இருந்த கழிவறைக்குப் பதிலாக, அடுத்த பெட்டியில் உள்ள கழிவறைக்குச் சென்றேன்.
“ஆனால் அந்த ஆடவர்களில் ஒருவர் கழிவறை வரை என்னைப் பின்தொடர்ந்து வந்தார். மேலும், கழிவறைக் கதவைத் திறக்கவும் அவர் முயன்றார். நல்லவேளை, அப்போது எனது தோழி அங்கு வந்து கதவருகே நின்றுகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பின்னர் இது குறித்து நாங்கள் பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் தெரிவித்தோம். அவர் எங்களை, குளிரூட்டி வசதிகொண்ட 2ஆம் வகுப்பு பெட்டியில் உள்ள இருக்கைகளுக்கு மாற்றிவிட்டார். அங்கு நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களுக்கு உதவி செய்த ரயில்வே அதிகாரிக்கு நன்றி,” என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஐனஸ் பாரியா வெளியிட்டுள்ள மற்றொரு காணொளிப் பதிவில், மும்பை வீதிகளில் நடந்து சென்றபோது இரு ஆடவர்கள் தம்மை நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்து, செல்ஃபி எடுக்கக் கோரி தொந்தரவு செய்ததாகப் பதிவிட்டுள்ளார்.

