அமராவதி: கடந்த 6-7ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சியில் இருந்த ‘தெலுங்கு சகோதரர்கள்’ என்று அழைக்கப்பட்ட ‘பொத்தப்பி சோழர்’களின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில் இந்தக் கல்வெட்டுகள் காணப்பட்டதாக மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தெரிவித்தார்.
இவரது தலைமையிலான குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டபோது, அக்கோவிலில் 16 தமிழ் கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
“பொத்தப்பி சோழர்கள் பெல்லாரி, கோனிடேனா, நன்னுாரு ஆகிய பகுதிகளில் ஆட்சி செய்தபோது பல்வேறு கோவில்களைக் கட்டியுள்ளனர். மேலும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களைச் சீரமைத்தும் அவற்றைப் பராமரிக்க நிலங்களைத் தானமாக வழங்கியும் ஆட்சி புரிந்தனர்,” என்று திரு முனிரத்தினம் கூறினார்.
புஷ்பகிரி நாத நாகேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பென்னா நதிக்கரையில் மேலும் பல பழமையான கோவில்கள் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது முனிரத்தினம் தலைமையிலான குழுவினர், கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இந்தப் பணி முடிந்த பிறகே அவற்றை முழுமையாக படித்து கூடுதல் விவரங்களைப் பகிர முடியும் என்றும் அவர் கூறியதாக தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

