புதுடெல்லி: நிலவின் துருவப் பகுதிக்கு கீழே பல இடங்களில் பனிக்கட்டிகள் இருக்கலாம் என சந்திரயான்-3 விண்கல ஆய்வுகளின் தரவுகள் தெரிவிப்பதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாறுபாடு காரணமாக பனிக்கட்டிகள் உருவாகலாம் என்று அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் துர்கா பிரசாத் கூறியுள்ளார்.
பனிக்கட்டிகள் குறித்து ஆய்வு செய்யும்போது அவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தகவல்களை அறிய முடியும் என்றும் அவர் கூறினார்.
நிலவின் தென்துருவப் பகுதியில், சூரிய ஒளிபடாத இடங்களில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட திரு துர்கா பிரசாத், நிலவின் மேற்பரப்பில் நிலவும் அதிக வெற்றிடம் காரணமாக இங்கு பனிக்கட்டி தண்ணீராக மாற முடியாது என்றார்.
“எனினும் ஆவியாக மாற முடியும். அதனால் நிலவு உயிர்வாழக்கூடிய நிலைமைகளை கொண்டிருக்கவில்லை. ஆனாலும், நிலவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய பனிக்கட்டி முக்கிய ஆதாரமாக உள்ளது.
“நிலவில் நீண்ட காலம் இருப்பதற்கு பனிக்கட்டியைப் பிரித்தெடுத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும் உத்திகளும் உருவாக்கப்பட வேண்டும்,” என்றார் துர்கா பிரசாத்.