லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ரூ.4,200 கோடி செலவில் அமைக்கப்பட்ட லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 20 நாள்களுக்குள் ஐந்து இடங்களில் விரிசலும் பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
63 கிலோமீட்டர் நீளமுடைய அந்த விரைவுச்சாலையை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கடந்த மாதம் 13ஆம் தேதி திறந்து வைத்தனர்.
பயண நேரத்தை 90 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்களாகக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட இச்சாலை, லேசான மழைக்கே தாக்குப்பிடிக்காமல் குண்டும் குழியுமாகியுள்ளது.
ஜூலை 25ஆம் தேதி உன்னாவ் மாவட்டத்தின் கொராரி கிராமத்துக்கு அருகே ஏறக்குறைய 5 முதல் 7 மீட்டர் வரையிலான பகுதி உள்வாங்கிச் சரிந்தது. மேலும் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் முடிய மூன்று மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, திட்ட மேலாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒப்பந்த நிறுவனமான ‘பிஎன்சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்திற்குப் புதிய திட்டங்கள் எதுவும் ஒதுக்கப்படாது என்றும், சீரமைப்புக்கான ரூ.3 கோடி செலவை அந்நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
மறுசீரமைப்பு முடியும்வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்ட போதிலும், கட்டண விலக்கைவிடத் தரமான, பாதுகாப்பான சாலையே அவசியம் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கட்டுமானத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


