தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடுவிக்கப்பட்ட சாத்வி பிரக்யாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

1 mins read
4e3e4caa-9f82-4f88-b936-9a6fcef8c58d
2008ல் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரில் சாத்வி பிரக்யாவும் ஒருவர். - படம்: இந்திய ஊடகம்

போபால்: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், 2008ல் மகாராஷ்டிராவில் நடந்த மாலேகான் வெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் சதித்திட்டம் என்கிறார்.   

அத்துடன், காங்கிரஸ் தேச துரோகத்திற்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவேண்டும் என்று மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கூறினார். 

சிறுபான்மையினரை எப்போதும் திருப்திப்படுத்த முற்படும் காங்கிரஸ், இந்துக்களைச் சித்திரவதை செய்து அவர்கள் மீது பொய்வழக்கு சுமத்திச் சிறைப்படுத்துவதாக சாத்வி பிரக்யா  குற்றஞ்சாட்டினார்.

குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்களைக் கொண்ட மாலேகானில் மோட்டார்சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; கிட்டத்தட்ட நூறு பேர் காயமடைந்தனர்.

2008 செப்டம்பர் 29ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் நடந்தது. 

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா உள்ளிட்ட எழுவரைச் சிறப்பு விசாரணை அமைப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 31) விடுவித்தது. சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு குற்றச்சாட்டுகளை அரசுத்தரப்பால் நிரூபிக்க முடியாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெயர்களைச் சொல்லுமாறு சித்திரவதையின்மூலம் கட்டாயப்படுத்தபட்டதாக சாத்வி பிரக்யா கூறினார். “பெரும்புள்ளிகளின் பெயரைக் குறிப்பிட எனக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது. ஆனால், நான் உடைந்து போகவில்லை. எவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தவில்லை. எனவே நான் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்