திருவனந்தபுரம்: வனவிலங்கு மீட்பு வீரர் ஒருவர், வலைக்குள் சிக்கிய பாம்புக்கு செயற்கை சுவாசம் அளித்து, அதைக் காப்பாற்றியதை அடுத்து, அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
லிஜோ கச்சேரி என்ற அந்த இளையர், இதற்கு முன்பு ‘சிபிஆர்’ முறையில் மான் கன்று ஒன்றைக் காப்பாற்றி இணையவாசிகளிடம் பாராட்டுகளைப் பெற்றவர்.
கேரளாவின் மண்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில், கோழிகளைப் பாதுகாக்க கட்டப்பட்டிருந்த வலை ஒன்றில் பாம்பு சிக்கியது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 25) இரவு முழுவதும் அந்தப் பாம்பால் வலையில் இருந்து வெளியேற முடியவில்லை. மறுநாள் அந்த வீட்டார் வந்து பார்த்தபோது, பாம்பு அசைவற்றுக் கிடந்தது.
இதையடுத்து, வனத்துறையினர் ஐந்து அடி நீளமுள்ள அந்த சாரைப்பாம்பை மீட்க வந்தனர்.
பாம்பின் உடலில் சிறுசிறு அசைவுகள் மட்டுமே காணப்பட்டன. இதன் மூலம் அது உயிருடன் இருப்பதை வனத்துறையினர் உறுதிசெய்த நிலையில், லிஜோ கச்சேரி பாம்பை மீட்க வந்துள்ளார்.
சில நிமிடங்களில் வெற்றிகரமாக வலையில் இருந்து பாம்பை மீட்ட அவர், உடனடியாக அதன் வாய் வழி செயற்கை சுவாசம் அளித்தார். பாம்பின் மூளைக்கு ரத்தம் செல்ல ஏதுவாக, அதன் வாலைப் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டு, ‘மசாஜ்’ செய்தார்.
இறுதியாக அந்தப் பாம்பிடம், ‘நீ உயிர் பிழைத்துவிட்டாய், இனி போகலாம் பையா’ என்று அவர் நகைச்சுவையாக கூறும் காணொளி, இணையத்தில் வெளியாகி, பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பார்ப்பவர்களைப் பதற வைக்கும் அந்தக் காணொளியில், உயிர் பிழைத்த பாம்பு மீண்டும் பலம் பெற்று மெல்ல ஊர்ந்து செல்வது, லிஜோ அதற்கு சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.