புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை பதவி விலகினார்.
அதையடுத்து புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், அவர் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதாக இந்திய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு பிரகலாத் ஜோஷி ஏற்கெனவே நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துவரும் நிலையில், கூடுதலாகக் கல்வி அமைச்சுப் பொறுப்பையும் அவர் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுடன் கல்வி அமைச்சராகவும் தம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் திரு பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாம் தன்னடக்கத்துடன் கல்வி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கல்வித்துறையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் இந்தியக்கல்வி அமைச்சரான திரு ஜோஷி கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் திரு தர்மேந்திர பிரதான் புதிய கல்விக்கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தியதாகக் குறிப்பிட்ட திரு ஜோஷி, புதிய கொள்கையால் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என்றார்.
பிரதமர் மோடி தன்மீது நம்பிக்கை வைத்து முக்கியமான பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் நேர்மையாகப் பணியாற்றி கல்வித்துறை சார்ந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உழைக்கப்போவதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி மேலும் தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் மத்திய அரசும் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் வேளையில் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) மறுசீரமைப்பது, வினாத்தாள் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் 2027 முதல் கணினி அடிப்படையிலான நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
புதிய கல்வி அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் பிரகலாத் ஜோஷி, இந்தச் சீர்திருத்தங்களை மேற்பார்வையிடுவது, நாட்டின் நுழைவுத் தேர்வு முறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகியவை அவரது முக்கியப் பொறுப்புகளாகும்.
ஜோஷி, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் இருந்து ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக இருந்து வருகிறார்.
2019 முதல் 2024 வரை, நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறைக்கான மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அவருக்கு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறைகள் ஒதுக்கப்பட்டன.

