பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

2 mins read
e856db48-46e0-4630-8955-8c6078c4979a
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜனவரி 2ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வந்தார். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரையும் அவரது ஆதரவாளர்களையும் போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். கிஷோரின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, காவல்துறையினர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பிடிஐயிடம் பேசிய பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங், “காந்தி மைதானத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கிஷோரையும் அவரது ஆதரவாளர்களையும் திங்கட்கிழமை காலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அவர்களின் உண்ணாவிரதம் சட்டவிரோதமானது. தடைசெய்யப்பட்ட தளத்திற்கு அருகில் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்,” என்றார்.

பீகாரில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் நிலைத் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள்களைக் குறிப்பிட்ட மையங்களிம் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதுவோர் வலியுறுத்தி வந்தனர்.

அவர்கள் மாநில அரசைக் கண்டித்து தேர்வாணையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், டிசம்பர் 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வு எழுதுவோரைக் காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பீகார் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து பாட்னாவில் உள்ள காந்தி திடலில் தேர்வு எழுதுவோர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தேர்வு எழுதுவோருக்கு ஆதரவாக உரிய நீதி கிடைக்க வேண்டி, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜனவரி 2ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்