பாட்னா: தேர்தலுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் குறைந்தது ரூ.100 கோடி சம்பளம் பெறுவதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த இவர், பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பாஜக, காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது, ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
பீகாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் போது தேர்தல் ஆலோசகராக இருந்தபோது தான் வாங்கிய சம்பளத்தை பிரசாந்த் கிஷோர் வெளிப்படுத்தினார். பெலகஞ்சில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “என்னுடைய பிரசாரத்திற்குக் கூடாரங்கள், நிழற்குடைகள் ஆகியவை அமைப்பதற்கு என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?,” எனப் பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேலும், “தேர்தலுக்கு ஒருவருக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலுக்கு நான் வியூகம் அமைத்துகொடுக்க ரூ. 100 கோடி கட்டணமாக பெற்றேன்,”என்றார் அவர்.
தன் சம்பளத்தைப்பற்றி பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகக் கூறியிருப்பது,கடந்த காலங்களில் அவரை அரசியல் ஆலோசகராகப் பணியமர்த்திய திமுக, திரிணாமூல், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

