பீகாரில் பிரஷாந்த் கிஷோரின்ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி

2 mins read
08588ac8-615d-4640-bc16-994f95402a14
தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் கட்சி தோல்வி அடைந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தின் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்த நிலையில் பீகாரில் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கும் பிரபல அரசியல் ஆலோசகர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது.

பிற கட்சிகளை வெற்றி அடைய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. பிரஷாந்த் கிஷோர் தேர்தல்களுக்கு வியூகம் வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஆந்திரா சட்டசபைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் என பிரஷாந்த் கிஷோர் வியூகம் வகுத்துக் கொடுத்து அந்தக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபைத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அந்தக் கட்சியும் அமோக வெற்றி பெற்றது. அதன் பின்னர் இனி தேர்தல் வியூகங்களில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்த பிரசாந்த், பீகாரில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பீகாரில் தனது பாதயாத்திரையை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அவர் தொடங்கினார்.

பீகார் முழுவதும் 3,000 கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்ற பிரசாந்த் கிஷோர், அடுத்த ஆண்டு 2025ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டசபைத் தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். ஆனால், பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது.

குறிப்புச் சொற்கள்