சண்டிகர்: ஹரியானா சட்ட மன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக அக்டோபர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் வரும் சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்கள் வரை வென்று ஹரியானாவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவாப் சிங் சைனி உள்ளார்.
ஹரியானாவை பொறுத்தவரை மொத்தம் 90 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் கடந்த லோக்போல் (LokPoll) சார்பில் ஹரியானா சட்ட மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடந்தது.
மொத்தம் 67,500 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இதன்மூலம் ஹரியானாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 46 முதல் 48 விழுக்காடு ஓட்டுகளுடன் 58 முதல் 65 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் பாஜகவில் நடந்த மாற்றம் மற்றும் பாஜகவின் செயல்பாடு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய வேலை வாய்ப்பை உருவாக்காததால் நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்கள் பாஜகவுக்குப் பதில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். அதுதவிர மனோகர் லால் கட்டாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி நவாப் சிங் சைனியை முதல்வராக்கியதும் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாகவும் காங்கிரஸ் கட்சிக்கு பலமாகவும் மாறி உள்ளது என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ஹரியானாவில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி), சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.