புதுடெல்லி: கைப்பேசிகளில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயமல்ல என இந்திய அரசு தெரிவித்தது.
சஞ்சார் சாத்தி செயலிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மக்களவையில் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே இந்தச் செயலியை கைப்பேசிகளில் முன்கூட்டியே நிறுவுவதை கட்டாயமாக்க வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தச் செயலியை அகற்றலாம் என்றும் செயலியில் உள்ள பயனர்களைப் பாதுகாப்பதைத் தவிர அதில் வேறு எந்தச் செயல்பாடும் இருக்காது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் இடையே இந்தியா முழுவதும் நாள்தோறும் இரண்டாயிரம் மோசடிச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே நாளில் மட்டும் ஆறு லட்சம் பேர் சஞ்சார் சாத்தி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது அதன் மொத்த பயன்பாட்டில் பத்து மடங்கு அதிகமாகும்.
இந்தச்செயலி மிக பாதுகாப்பானது என்றும் இணைய உலகில் வலம் வரும் மோசமான நபர்களிடம் இருந்து குடிமக்களை பாதுகாப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய தகவல் தொடர்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

