டிரம்ப் வரியைப் பின்னுக்குத் தள்ளி 7.4% வளர்ச்சியை நோக்கி முன்னேறும் இந்தியா

2 mins read
ef787aec-2e6f-4356-8168-055bae0fa1c7
உலகின் நான்காவது பெரிய பொருளியல் நாடு என்னும் இலக்கை எட்டத் துடிக்கிறது இந்தியா. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு இடையிலும் இந்தியப் பொருளியல், 2026 மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டில் 7.4 விழுக்காடு வளர்ச்சி காணும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 1 விழுக்காடு அதிகம். இந்திய அரசாங்கம் புதன்கிழமை (ஜனவரி 7) பின்னேரத்தில் வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

மேலும், வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கணித்ததை ஒட்டி மத்திய அரசின் முன்னுரைப்பு அமைந்துள்ளது.

2024-2025 நிதி ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 6.5 விழுக்காடு.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் மெதுவான வளர்ச்சி கண்டுவரும் இந்தியப் பொருளியலில் இனி அதிக வேகம் இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 விழுக்காடு வரி விதித்திருக்கும் வேளையில் இந்தியாவின் வளர்ச்சி வேகம் காணும் என கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகிய இரண்டும் பொருளியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும்.

அவற்றில் உற்பத்தித் துறை, வரும் நிதி ஆண்டில் ஈரிலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ போன்ற திட்டங்களும் உள்நாட்டு உற்பத்தி ஊக்கத்தொகைத் திட்டங்களும் நல்ல பலன்களை அளித்திருப்பது வளர்ச்சியின் முன்னுரைப்பை அதிகரித்துள்ளது.

சேவைத் துறைக்கு உட்பட்ட நிதிச் சேவை மற்றும் சுற்றுலாத் துறைகள் மிகுந்த எழுச்சி காணும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதற்கு உறுதுணையாக தகவல் தொழில்நுட்பம் கைகொடுக்கும்.

மற்றொரு துறையான வேளாண்மைத் துறை, இயற்கையின் சாதக நிலையைப் பொறுத்து வரும் நிதி ஆண்டில் 3.5 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், நாட்டின் பொருளியல் வளர்ச்சியை இன்னும் ஊக்கப்படுத்தும் வகையிலான புதிய அறிவிப்புகளும் வரிச்சலுகைகளும் இடம்பெறும் என்று தொழில்துறையினர் எதிர்பார்ப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்