போபால்: கர்ப்பிணிப் பெண்ணை வைத்து ரத்தக்கறை படிந்த படுக்கையைச் சுத்தம் செய்ய வைத்த ஆரம்பச் சுகாதார மையத்தைச் சேர்ந்த தாதியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மத்தியப்பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு சிவராஜ் மராவி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று கடுமையாகத் தாக்கப்பட்டார். நிலத்தகராறு காரணமாக அவரது எதிர்த்தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை பலனின்றி சிவராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து, தாய்மை அடைந்துள்ள அவரது மனைவி ரோஷினியை மருத்துவமனைப் படுக்கையைச் சுத்தம் செய்யுமாறு அங்கிருந்த ஊழியர்கள் வற்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், ஐந்து மாதக் கர்ப்பிணியான ரோஷினி, ரத்தக்கறை உள்ள மருத்துவமனைப் படுக்கையைச் சுத்தம் செய்யும் காணொளியும் இணையத்தில் வெளியானது.
ரோஷினி தற்போது ஐந்து மாதக் கர்ப்பிணி என்றும் அவரை மோசமாக நடத்திய சுகாதார நிலைய மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரண்டு தாதியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.