சென்னை: மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட ‘பத்ம பூஷண்’ விருதை அவரது நினைவிடத்தில் வைத்து அவரின் மனைவி பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
கடந்த வியாழக்கிழமை (மே 9) டெல்லியில் இந்திய அதிபர் திரவுபதி முர்மிடமிருந்து, தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, சனிக்கிழமையன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய பிரேமலதாவிற்கு, விமான நிலையத்திலேயே தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு, தேமுதிக தலைமையகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்குப் பேரணியாகச் சென்று ‘பத்ம பூஷண்’ விருதைச் சமர்ப்பிக்க தேமுதிகவினர் முடிவு செய்தனர்.
இதற்காக, ஏராளமான கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் பிரேமலதாவின் வாகனத்துடன் அணிவகுத்து நின்றன. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் நடப்பிலிருப்பதால் சாலைப் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது.
ஆயினும், சாலையில் பேரணியாகச் சென்று, கட்சித் தலைமையகத்தை அடைந்த பிரேமலதா, அங்குள்ள தன் கணவரின் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து, பூசை செய்து, வணங்கினார். பிரேமலதாவுடன் அவருடைய இரண்டு மகன்களும் தம்பி சுதீஷும் இருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை உலகத் தமிழர்களுக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
“விருதை மிகுந்த வலியுடன் பெற்றுக் கொண்டேன். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது விருது கிடைத்திருந்தால் கதர் சட்டை, கதர் வேட்டி அணிந்து அதனைப் பெற்று, தமிழர்களின் பண்பாட்டை நிலைநாட்டியிருப்பார்,” என்று சொன்னார்.
மேலும், வரும் ஆண்டுகளில் விஜயகாந்தின் பிறந்தநாளில் டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.