தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அதிபர் அனுமதி

1 mins read
676649cb-1636-4405-b5d9-328e1527f045
முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி செய்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளுக்கு ஏராளமான வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தத் தலைமைச் செயலாளருக்கு மாநில ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரைத்தது.

முன்னதாக மாநிலத்தில் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய ஊழல் தடுப்புப்பிரிவும் கடந்த 2020ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த அதிபரிடம் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அதிபர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் மீது மதுபான ஊழல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்