புதுடெல்லி: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவரான போப் ஃபிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய அதிபர் திரெளபதி முர்மு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு இருவரும் வத்திகனுக்குப் புறப்பட்டுள்ளனர் என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.
வத்திகன் செல்லும் இந்தியக் குழுவில் மற்றொரு மத்திய அமைச்சரான ஜார்ஜ் குரியன், கோவா துணை சட்டமன்ற நாயகர் பீட்டர் டி சூஸா ஆகியோரும் இருக்கின்றனர் என்று திரு ரிஜிஜு தெரிவித்தார். எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் திரு ரிஜிஜு அத்தகவல்களை வெளியிட்டார். அவர்கள் வத்திகனுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்வர். இந்திய அரசாங்கம், இந்திய மக்கள் சார்பில் அவர்கள் போப் ஃபிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்று தங்களின் அனுதாபங்களைத் தெரிவிப்பர் என்று திரு ரிஜிஜு எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். போப் பிரான்சிஸ், இம்மாதம் 21ஆம் தேதி தமது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 88.
போப் பிரான்சிஸ், ரோமன் கத்தோலிக்க திருச்சபைத் தலைவராகப் பொறுப்பு வகித்த முதல் லத்தீன் அமெரிக்கராவார். அவர் 2013ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி போப் பெனடிக்டிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

