புதுடெல்லி: இந்திய அதிபர் திரௌபதி முர்முவைத் தொடர்புபடுத்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியோடு சில காணொளிகள் வெளியாகி இருப்பதாக இந்திய பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) தெரிவித்துள்ளது.
அதிபர் முர்முவின் இந்தக் காணொளிகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறு பொதுமக்களை அப்பணியகம் வலியுறுத்தியது. காணொளியில் குறிப்பிடப்பட்ட கூற்றுகளை நம்பிவிட வேண்டாம் என அதன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு கூற்றுகளையும் எப்போதும் சரிபார்க்கவும், அத்தகைய உள்ளடக்கத்தை உடனடியாகப் பகிரவும் சிறப்புத் தொலைபேசி எண்ணில் புகாரளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
“பாகிஸ்தான் பிரசார சமூக ஊடக கணக்குகள் சில, அதிபர் திரௌபதி முர்முவின் மின்னிலக்க முறையில் மாற்றப்பட்ட காணொளியைத் தவறான கூற்றுகளுடன் பரப்புகின்றன. இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது.
“நாட்டில் தீவிரவாதம், மதச்சார்பின்மையை பலவீனப்படுத்துவது குறித்து மக்களை தவறாக வழிநடத்துவதற்காக இக்காணொளி பரப்பப்படுகிறது,” என்று பிஐபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிபர் இத்தகைய நோக்கத்துடன் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிஐபி, உண்மையான, திருத்தப்படாத காணொளி இணைப்பையும் பகிர்ந்துகொண்டது.

