புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரிக்ஸ் அமைப்பின் மேம்பாட்டுக்கு ஐந்து அம்சங்களில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தப் பரிந்துரைத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம், முதலீட்டு வசதிகள், மின்னிலக்கத் துறை, அறிவார்ந்த உற்பத்தி, திறன் மேம்பாடு ஆகிய ஐந்து அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்படி பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாம் நாளில் திரு ஸி கேட்டுக்கொண்டார்.
மேம்பட்ட பிரிக்ஸ் அமைப்பு இன்னும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தி, உன்னத மேம்பாட்டை அடைந்து நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புக்கான உறுதியான அடித்தளத்தை இட வேண்டும் என்று ஸி வலியுறுத்தினார்.
இந்நிலையில், மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்து ஒன்றில் அதிபர் ஸி கலந்துகொள்ளவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பிரிக்ஸ் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விருந்தில் அபு தாபியின் பட்டத்து இளவரசர் ஷெயிக் காலிட் பின் முகம்மதும் கலந்துகொள்ளவில்லை. மாநாடு முடிந்து அவர் தாய்நாட்டுக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டது.
திரு ஸி, திரு மோடியின் விருந்தில் பங்கேற்காமல் இருந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தகவல் அறிந்த வட்டாரங்கள் அவர் ஓய்வெடுப்பதற்காக அறைக்குச் சென்றாகக் கூறின.
சனிக்கிழமை பிற்பகல்வாக்கில் புதுடெல்லியைச் சென்றடைந்த ஸிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே தனிப்பட்ட விதத்தில் இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே பேசிய தலைவர்கள், “மாறுபட்ட கண்ணோட்டங்கள் சர்ச்சைகளாக மாறக் கூடாது,” என்றனர்.
இருதரப்பு எல்லைகுறித்து நியாயமான, முறையான, இருதரப்பும் அங்கீகரிக்கும் தீர்வுக்கு இணங்குவதாகத் தலைவர்கள் இருவரும் உறுதிகூறினர்.
இருதரப்பும், பரஸ்பர மரியாதை போன்றவற்றின் அடிப்படையின்கீழ் வழிநடத்தப்பட வேண்டும் என்று திரு மோடி கூறியதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா அதைக் கடைப்பிடித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களுக்குப் பதிலாகப் பங்காளிகள் என்று திரு ஸி திரு மோடியிடம் கூறியதாகச் சீன வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
அவை மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஒன்றுக்கு ஒன்று வழங்கவேண்டுமே தவிர அச்சுறுத்தல்களை அல்ல என்று அந்த அறிக்கை சுட்டியது.

