மணிப்பூரில் அமலுக்கு வந்த அதிபர் ஆட்சி; மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

2 mins read
b8ff22c4-0b7f-4255-9552-c8860d17e73f
மணிப்பூரில் உள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினர். - படம்: பிடிஐ

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் அம்மாநில ஆளுநர் பரிந்​துரையின் பேரில் அதிபர் ஆட்சி அமல்​படுத்தப்பட்டுள்​ளது. இதனால், அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் 12வது முறையாக அதிபர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

அண்மையில், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பதவியைவிட்டு விலகினார். மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா விரிவான அறிக்கை ஒன்றை அதிபர் திரவுபதி முர்மு​விடம் தாக்கல் செய்​தார்.

அதில் மணிப்​பூரில் அதிபர் ஆட்சியை அமல்செய்ய ஆளுநர் பரிந்​துரை செய்திருந்​தார். இதைத் தொடர்ந்து மணிப்​பூரில் பிப்ரவரி 13ஆம் தேதி அதிபர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இதுதொடர்பாக இந்திய அதிபர் மாளிகை வெளி​யிட்ட அரசாணை​யில், “ஆளுநர் அளித்த அறிக்கை முழு​மையாக ஆய்வு செய்​யப்​பட்​டது. மணிப்பூரில் அதிபர் ஆட்சி அமல் செய்ய வேண்டிய அவசியம் எழுந்​திருக்கிறது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரி​வின்படி மணிப்​பூரில்  மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு கலைக்கப்பட்டு, அதிபர் ஆட்சி அமல்​படுத்​தப்​படு​கிறது,” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனையடுத்து, இம்பாலில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா தலைமை​யில் அவசர ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி நடந்தது.

இதில், மத்திய பாதுகாப்புப் படை மூத்த அதிகாரிகள் பங்கேற்​றனர். மணிப்​பூர் முழு​வதும் மேற்​கொள்​ளப்​பட்டு இருக்​கும் பாது​காப்பு ஏற்பாடுகள் குறித்து ஆளுநரிடம், அவர்கள் விரிவாக விளக்கினர்.

ஆளுநரின் உத்தர​வின்​பேரில் மாநில காவல் துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் இணைந்து பாது​காப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மைதேயி, குகி பிரிவை சேர்ந்த கிளர்ச்​சிக் குழுக்கள் கண்காணிப்பு வளையத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு உள்ளன.

அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து மணிப்பூரின் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்​துக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்​களால் சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்​கப்​பட்​டது. மாநில அரசால் நிலை​மையை கையாள முடிய​வில்லை,” என்றார்.

மேலும், “மணிப்​பூர், மியன்மார் இடையே 398 கி.மீ. தொலை​வுக்கு எல்லைப்​பகுதி நீள்​கிறது. இதனால் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில் ஊடுருவலை தடுப்​ப​தற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்​படுத்த வேண்​டும்,” என அதில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்