தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி

2 mins read
d4d92970-9c77-4979-b62a-1ab039f8db13
டிசிஎஸ் நிறுவனம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது - படம்: இந்திய ஊடகம்

மும்பை: பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்), 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 27) அறிவித்தது.

இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கங்களின் அமைப்பான நைட்ஸ் (NITES), மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டியாவிற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

“அனைத்துப் பணி நீக்கங்களையும் நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு, டிசிஎஸ் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்,” என நைட்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

டிசிஎஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் பெரிய அளவிலான பணிநீக்கங்களைச் செய்ய அனுமதிப்பது, மற்ற நிறுவனங்களுக்குத் தவறான உதாரணமாகிவிடும் எனக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கை வேலைவாய்ப்பு நிச்சயமற்ற தன்மை, தொழிலாளர் பாதுகாப்பு குறைதல் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் சூழலில் நம்பிக்கை குறைவதற்கும் வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் தாமதமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், 600 நிபுணர்களின் ஆட்சேர்ப்பு தாமதம் தொடர்பான கவலைகளைத் தொழிற்சங்கம் எடுத்துரைத்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்திற்குக் கண்டனம்

டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு, இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நிறுவனத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் பணி விலகல் அழுத்தத்தை எதிர்க்க, ஊழியர்கள் பணிநீக்கத்தைச் சந்திக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணிநீக்க அறிவிப்பைத் திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு கர்நாடக மாநில தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல், ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதை டிசிஎஸ் தவிர்க்குமாறு ஐடி ஊழியர்கள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிசிஎஸ் தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.

2025 நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்