புதுடெல்லி: இந்தியாவில் நீண்டதூரப் பயணத்துக்கு படுக்கையுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் காண்கிறது.
அந்த சொகுசு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
புதுடெல்லியில் உள்ள ரயில் பவனில் புத்தாண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியா முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
குறித்த நேரம், விரைவான பயணம், வசதியான இருக்கைகள், குளிரூட்டி வசதி, சுகாதாரமிக்க கழிவறை, தானியங்கிக் கதவுகள், சிசிடிவி கண்காணிப்பு என பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்டவை வந்தே பாரத் ரயில்கள்.
அந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனாலும், வந்தே பாரத் ரயில்களில் தற்போது இருக்கை வசதி மட்டுமே உள்ளது. அதனால் நீண்டதூரம் பயணம் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அந்தக் குறையைப் போக்க, நீண்ட தூர இரவு நேரப் பயணத்துக்காக தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் ரயில் மேற்கு வங்கத்தின் கோல்கத்தா நகரில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை இயக்கப்பட உள்ளது.
அந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என்று கூறிய அஸ்வினி வைஷ்ணவ், “படுக்கை வசதியுடன் கூடிய ரயிலின் கட்டணங்கள் விமானக் கட்டணத்தைவிட கணிசமாகக் குறைவாக இருக்கும்,” என்றார்.
மேலும், “அத்தகைய ரயில்களின் சேவை அடுத்த 15, 20 நாள்களில், ஜனவரி 18 அல்லது 19ஆம் தேதி வாக்கில் செயல்பாட்டுக்கு வரும்.
“இதனைத் தொடங்கிவைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்த ஒருசில நாள்களில் தேதியை அறிவிப்பேன்,” என்றார் அவர்.
“கவுகாத்தி - ஹவுரா விமானப் பயணத்துக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செலவாகும். வந்தே பாரத் ரயிலில் உணவு உட்பட 3ஆம் வகுப்பு குளிரூட்டி ரயிலின் பயணக் கட்டணம் ஏறத்தாழ ரூ.2,300ஆக இருக்கும்,” என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார்.

