குறைவான கட்டணத்தில் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்; இரண்டு வாரத்தில் அறிமுகம்

2 mins read
9880777b-0037-47f4-adc7-692418f5f22f
புதிய ரயிலை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என்று ரயில்வே அமைச்சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். - படம்: தமிழ் இந்து

புதுடெல்லி: ​இந்தியாவில் நீண்டதூரப் பயணத்துக்கு படுக்கையுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் காண்கிறது.

அந்த சொகுசு ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி விரை​வில் தொடங்கி வைப்​பார் என ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

புதுடெல்லியில் உள்ள ரயில் பவனில் புத்தாண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியா முழு​வதும் முக்​கிய வழித்​தடங்​களில் வந்தே பாரத் ரயில் இயக்​கப்​பட்டு வரு​கிறது.

குறித்த நேரம், விரை​வான பயணம், வசதி​யான இருக்​கைகள், குளிரூட்டி வசதி, சுகாதாரமிக்க கழிவறை, தானி​யங்கிக் கதவு​கள், சிசிடிவி கண்​காணிப்பு என பாது​காப்பு அம்​சங்​கள் மற்​றும் அதிநவீன வசதி​களைக் கொண்டவை வந்தே பாரத் ரயில்கள்.

அந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்​ளது.

ஆனாலும், வந்தே பாரத் ரயில்களில் தற்போது இருக்கை வசதி மட்டுமே உள்ளது. அதனால் நீண்டதூரம் பயணம் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அந்தக் குறையைப் போக்க, நீண்​ட தூர இரவு நேரப் பயணத்​துக்​காக தற்​போது படுக்கை வசதி கொண்ட ரயில்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் முதல் ரயில் மேற்கு வங்​கத்​தின் கோல்​கத்​தா​ நகரில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை இயக்​கப்பட உள்​ளது.

அந்த ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி விரைவில் தொடங்​கி வைக்க உள்ளார் என்று கூறிய அஸ்வினி வைஷ்ணவ், “படுக்கை வசதியுடன் கூடிய ரயி​லின் கட்டணங்கள் விமானக் கட்​ட​ணத்தைவிட கணிச​மாகக் குறை​வாக இருக்​கும்,” என்றார்.

மேலும், “அத்தகைய ரயில்களின் சேவை அடுத்த 15, 20 நாள்களில், ஜனவரி 18 அல்லது 19ஆம் தேதி வாக்​கில் செயல்​பாட்​டுக்கு வரும்.

“இதனைத் தொடங்கிவைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளோம். அடுத்த ஒருசில நாள்களில் தேதியை அறி​விப்​பேன்,” என்றார் அவர்.

“கவுகாத்தி- ஹவுரா விமானப் பயணத்​துக்குக் கிட்டத்தட்ட ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செல​வாகும்.

“வந்தே பாரத் ரயி​லில் உணவு உட்பட 3ஆம் வகுப்பு குளிரூட்டி ரயிலின் பயணக் கட்​ட​ணம் ஏறத்தாழ ரூ.2,300ஆக இருக்கும்,” என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்