தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் டிரம்ப்பைப் பிரதமர் மோடி விரைவில் சந்திக்கக்கூடும்: நாளேடு தகவல்

2 mins read
5cf7d8f8-7224-4288-8564-779131eb10ef
(இடது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (வலது) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்திக்கக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது. - கோப்புப் படம்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திக்கக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுக் கூட்டத்திற்காகத் திரு மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுக் கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. நாட்டுத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்களுக்கான கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை நடைபெறும்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரு மோடி அமெரிக்கா செல்கிறார் என்றபோதும் திரு டிரம்பைச் சந்தித்து வர்த்தகம், வரி குறித்துப் பேசுவதும் முக்கிய நோக்கமாக உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சொன்னது.

ர‌ஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதைக் கண்டிக்கும் வகையில் இந்தியப் பொருள்கள்மீது 25 விழுக்காடு கூடுதல் வரியை விதிக்கப்போவதாக திரு டிரம்ப் அறிவித்ததை அடுத்து திரு மோடியின் சந்திப்பு குறித்த தகவல் வெளிவந்தது.

திரு டிரம்ப்பின் கூடுதல் வரியால் இந்திய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரி 50 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பங்காளி நாடுகளில் இந்தியா ஆக அதிக அளவிலான வரியை எதிர்கொள்கிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற ஐந்து சமரசப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் பல பெரிய வர்த்தக உடன்பாடுகள் இன்னும் எட்டப்படாமல் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். அந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் அடங்கும்.

ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் திரு ஸ்காட் கூறினார்.

அக்டோபர் மாதத்துக்குள் டிரம்ப் நிர்வாகம் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக திரு பெஸ்ஸண்ட் ஃபாக்ஸ் பிசினஸ் கட்டமைப்பின் ‘குட்லோவிடம்’ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்