எல்என்ஜேபி மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி

1 mins read
6cdc37bf-07ce-421f-89d0-a06134d4e35a
மருத்துவமனையில் காயமடைந்தவரை நலம் விசாரிக்கிறார் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூட்டானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடனேயே, நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்கு விரைந்தார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, எல்என்ஜேபி மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர் பிரதான நுழைவாயிலில் ஊடகங்களைத் தவிர்த்து, பிரத்யேகப் பின்புற வாயில் வழியாக மருத்துவமனைக்குள் சென்றார்.

அங்கு குண்டுவெடிப்பால் காயமடைந்தவர்களைப் பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்களிடம், சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது. அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்