புதுடெல்லி: சீனா - அமெரிக்கா போட்டிகளுக்கிடையே இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் இந்தியா தனது வட்டாரப் பங்காளித்துவத்தை அதிவேகமாக வலுப்படுத்தி வருகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மூன்று நாடுகளுக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின்போது, வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பொருளியல் சார்பை நிலைநிறுத்தவும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தோனீசியாவுக்கு பிரம்மோஸ் அதிவேக ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் முதல், ஆஸ்திரேலியா, ஜப்பானுடன் தற்காப்பு, எரிசக்தி அத்தியாவசிய கனிம வளங்கள் சார்ந்த பங்காளித்துவம்வரை இந்தியாவின் இந்தோ-பசிபிக் உத்திகள் தற்போதைய புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடியின் இந்தோனீசியப் பயணத்திற்கு முந்தைய நாள், பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணைச் சோதனையை நடத்தியது வட்டார நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழலில், அமெரிக்காவின் வட்டாரப் பங்களிப்பு குறைந்து வருவதை உணர்ந்த இந்தோ-பசிபிக் நாடுகள், தங்களின் பாதுகாப்பு, பொருளியல் சுமைகளைத் தாங்களே பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளன.
ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகள் அண்மையில் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமும், நியூசிலாந்து - இந்தியாவின் ‘சிறு-பங்காளித்துவ’ உத்திகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதும் இதற்குச் சான்று.
‘பரஸ்பர நம்பிக்கை’ என்பதே வட்டாரத்தின் மிகப்பெரிய உத்திபூர்வச் சொத்து என்று தமது பயணங்களின்போது பிரதமர் மோடி அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இரு துருவங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க விரும்பாத வட்டார நாடுகளுக்கு, இந்தியா நம்பகமான மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ளது.
உற்பத்தி, தொழில்நுட்பத் தேவைகளுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றியமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்குத் தேவையான யுரேனியத்தை வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. குறைகடத்தி உற்பத்தி, விநியோகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் இருநாடுகளும் கைகோத்துள்ளன.
தற்போதைய சூழலில் சீனாவுடனான உறவைச் சீரமைக்க இந்தியா முயன்றாலும், வட்டாரத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கத் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து ஒரு பலமான பாதுகாப்பு வளையத்தை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கி வருகிறது.

