புதுடெல்லி: இந்தியாவில் புதுப்புது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் விதமாக ‘பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார்.
தற்போது இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
ஏறக்குறைய ரூ.99 ஆயிரத்து 446 கோடி செலவில், இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்படுகிறது.
இதன்மூலம் கிட்டத்தட்ட 1.92 கோடி பேர் முதல்முறையாகத் தொழில் துறையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2047ல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவை நோக்கி ‘விக்சித் பாரத்’ திட்டத்தை முன்மொழிந்தார். அதன் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் இடம்பெறுகிறது.
இந்தத் திட்டத்தின்மூலம் ஊழியர்களைக் கவரும் விதமாக, ஒரு லட்சத்துக்கு குறைவாகச் சம்பளம் பெறும் புதிய ஊழியர்களின் பி.எப். (வைப்புநிதி) கணக்கில் ஒரு மாதச் சம்பளத்தை இரண்டு தவணைகளாகப் பிரித்துச் செலுத்தி ஊக்குவிக்கப்பட திட்டமுள்ளது.
இதேபோன்று முதலாளிகளைக் கவரும் வகையில், நீடித்த வேலைவாய்ப்புகளை வழங்கும் முதலாளிகளுக்கு ஓர் ஊழியருக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படவும் உள்ளது.