புதுடெல்லி: பிரதமர் மோடி தமது நாட்டுக்கு வருவதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதி செய்துள்ளார்.
அதையடுத்த சில மணி நேரங்களில், நம்பிக்கை, புத்தாக்கம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான இருதரப்புக் கடப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இஸ்ரேலுடனான நட்பை மதிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் செல்கிறார்.
இது, இஸ்ரேலுக்கான அவரது இரண்டாவது பயணமாகும். கடந்த 2017 ஜூலையில் அவர் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.
மோடியின் பயணம் குறித்து நெட்டன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்று காலை அமைச்சரவைக் கூட்டத் தொடக்கத்தில் வரும் புதன்கிழமை என்னுடைய அன்பு நண்பரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் குறித்துத் தெரிவித்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இஸ்ரேல், இந்தியா இடையிலான பிணைப்பு இரு உலகளாவிய தலைவர்களின் சக்திவாய்ந்த கூட்டணி. புத்தாக்கம், பாதுகாப்பு, பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையில் நாங்கள் பங்காளிகளாக விளங்குகிறோம். செயற்கை நுண்ணறிவு முதல் வட்டாரப் பாதுகாப்பு வரை எங்களுடைய பங்காளித்துவம் தொடர்ந்து உச்சத்தை எட்டுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று திரு மோடி கூறியுள்ளார்.
திரு நெட்டன்யாகுவுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ள பதிவில், “இஸ்ரேல், இந்தியா இடையிலான பிணைப்பு, இருதரப்பு உறவு பன்முகத்தன்மை கொண்டது என்பதில் நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலுடனான நீடித்த நட்பை இந்தியா மதிக்கிறது. என்னுடைய இஸ்ரேலியப் பயணத்தில் பலவற்றைக் கலந்துரையாட ஆவலுடன் இருக்கிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
இந்தியா தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திரு மோடியின் பயணத்தில் ராணுவ ஆயுதம் தொடர்பான பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நவீன ஆளில்லா வானூர்திகள், லேசர் ஒளிக்கற்றைத் தற்காப்புக் கட்டமைப்பு, நீண்டதூரம் பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா வாங்கலாம் என்று ஃபர்ஸ்ட்போஸ்ட் என்ற ஊடகம் கூறியுள்ளது.

