மலேசியா செல்லும் பிரதமர் மோடி: தமிழர்களைச் சந்திக்கிறார்

2 mins read
dccd5f20-3550-4922-8b6c-e0a812b02fae
வானதி சீனிவாசன். - படம்: சமயம் தமிழ்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல இருப்பதாகவும் அங்கு வாழும் தமிழர்களை அவர் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அங்கு பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிப்ரவரி 7ஆம் தேதி திரு மோடி கோலாலம்பூர் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் மலேசியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது‌. அப்போது பீகார் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார் திரு மோடி. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அந்நாட்டுப் பிரதமரை ‘பீகாரின்‌ மகள்’ என்று அவர் குறிப்பிட்டது அம்மாநிலத் தேர்தலில் பேசுபொருளானது.

அதேபோல் தற்போது மலேசியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது அங்குள்ள தமிழர்களைச் சந்திப்பதன் மூலம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பாஜகவினர் கருதுகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன். இதற்காக அவர் கோலாலம்பூர் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமது மலேசியப் பயணத்தின்போது கோலாலம்பூர் மாரியம்மன் கோவில், பத்துமலை முருகன் கோவில்களில் அவர் வழிபாடு செய்வார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், தனது ‘மனத்தின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்