அகமதாபாத்: நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடத்தில் நடக்கும் மீட்புப் பணிகளைப் பிரதமர் பார்வையிட்டார். அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்தர படேல், விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த சிலரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தையும் பார்வையிட்ட திரு மோடி, அதிகாரிகளுடன் பேசினார். விமானச் சேவைகள் வழக்கம்போல் செயல்படுவதாகப் பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கூறினர்.