புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியின் 119வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் இரட்டிப்பாகியுள்ளன என்றும் குழந்தைகளிடையே இது அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
10 விழுக்காடு அளவுக்கு சமையல் எண்ணெயைக் குறைத்து வாங்கவும், பின்னர் அதனை சமையலில் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளும்படியும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
“ஓர் ஆரோக்கியமான நாடாக மாற, நாம் உடல் பருமன் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும்.
“ஓர் ஆய்வின்படி, இன்று எட்டுப் பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
“கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது உடல் பருமன் பிரச்சினை இரட்டிப்பாகியுள்ளது. கவலைக்குரிய ஒன்றாக குழந்தைகளிடையே இந்த உடல் பருமன் பிரச்சினை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.
“எனவே, ஒவ்வொரு மாதமும் 10% அளவுக்கு குறைவான எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். சமையலுக்கு வாங்கும்போது 10% குறைவான எண்ணெயை வாங்கலாம். இது உடல் பருமனைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும்.
“நமது உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், நமது எதிர்காலத்தை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் நோயற்றதாகவும் மாற்ற முடியும்,” என்று பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறினார்.
மேலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வெளிப்புற விளையாட்டில் ஈடுபட்டு, விளையாட்டுக் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

