தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இனி அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி

2 mins read
b43d5dea-2915-4040-9f83-b6026d1388ae
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியபோது, “இன்று அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் பெற்றுள்ளனர். உங்கள் புதிய பொறுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.

“பொருளாதாரத்தை, உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பாகும். உங்கள் வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் மூன்று பேர் பெண்கள். தொழில்நுட்பம், தரவு, புதுமை ஆகிய துறைகளில் இந்தியாவின் எழுச்சிக்கு இளைஞர்கள் உந்துசக்தியாக உள்ளனர்.

உள்நாட்டு நீர் போக்குவரத்தில் இந்தியா ஒரு புதிய சாதனையைப் படைத்து உள்ளது. 2014க்கு முன்பு உள்நாட்டு நீர் போக்குவரத்து மூலம் 18 மில்லியன் டன் சரக்குகள் நகர்த்தப்பட்டன. இந்த ஆண்டு உள்நாட்டு நீர் போக்குவரத்து மூலம், சரக்கு இயக்கம் 145 மில்லியன் டன்களுக்கு மேல் எட்டியுள்ளது.

இது தொடர்பாக தொடர்ச்சியான கொள்கைகளை வகுத்துள்ளதால் இந்தியா இந்த சாதனையை பெற்றுள்ளது. முன்பு 5 தேசிய நீர்வழிகள் மட்டுமே இருந்தன. தற்பொழுது அது 110ஆக அதிகரித்துள்ளது.

முன்பு நீர்வழிகளின் செயல்பாட்டு நீளம் சுமார் 2,700 கி.மீ. ஆக இருந்தது, தற்போது அது ஏறக்குறைய 5,000 கி.மீ.ஆக உள்ளது. நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாடு முன்னணியில் இருக்கிறது,” என்று பேசினார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்