தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நீங்கள் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்’: சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம்

2 mins read
3567ffb8-c1b1-4273-82f7-4f19d2c3bfdf
2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, ​​நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுடன் அளவளாவுகிறார். - புகைப்படம்:எக்ஸ்/@MEAIndia

புதுடெல்லி: அனைத்துலக விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து பூமிக்குத் திரும்பும் இந்திய வம்சாவளியான நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தை இந்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அனைத்துலக விண்வெளி மையத்தில் தங்கியிருந்த பின்னர் சுனிதா வில்லியம்சும் அவரது சக நண்பர் புட்ச் வில்மோரும் புதன்கிழமை (மார்ச் 19) அதிகாலை பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

இந்நிலையில், 59 வயது சுனிதா வில்லியம்சுக்கு கடிதம் எழுதியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ள பிரதமர் மோடியின் கடிதத்தில், “நான் அமெரிக்காவுக்கு அண்மையில் வருகை தந்தபோது அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பைடனைச் சந்தித்து, ​​உங்கள் நலம் குறித்து விசாரித்தேன்.

“1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர்.

“நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

“பூமிக்குத் திரும்பிய பின்னர், இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது.

“நீங்களும் வில்மோரும் பாதுகாப்பாகத் திரும்ப வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுனிதா வில்லியம்சின் கணவர் மைக்கேல் வில்லியம்சுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்