பிரதமரின் போலி காணொளிகள்: மத்திய அரசு மறுப்பு

பிரதமரின் போலி காணொளிகள்: மத்திய அரசு மறுப்பு

2 mins read
d8949cc1-9f0e-45c6-ae05-87ce47fe7bc9
பாகிஸ்தானைச் சேர்ந்த சில சமூக ஊடகப் பக்கங்கள் போலிக் காணொளிகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பேசுவது போன்ற போலி காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதற்கு இந்திய அரசாங்கம் கடும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைக் குறிப்பிட்டு இந்தக் காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைப் பிரதமரும் மத்திய அமைச்சரும் அச்சுறுத்துவது போன்று சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவுகளை மாற்றியமைத்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தத் தவறான காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நிலவும் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே பாகிஸ்தானைச் சேர்ந்த சில சமூக ஊடகக் கணக்குகள் இவற்றைத் தொடர்ந்து பரப்பி வருவதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டித் தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள், வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையையும் விரிவான சீர்திருத்தங்களையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களைத் திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய போலி காணொளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக இந்திய அரசின் செய்தித் தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு முறையான விளக்கம் அளித்துள்ளது.

போலி காணொளிகளில் காட்டப்பட்டுள்ளது போன்று பிரதமரோ அல்லது மத்திய அமைச்சர்களோ எந்தவித மிரட்டலையும் மாணவர்களுக்கு விடுக்கவில்லை என்று அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசி வெளியிட்ட காணொளியையும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தவறாக மாற்றி அமைத்துள்ளதாக அரசு தெரிவித்தது.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற போலிச் செய்திகளையும் பொய்யான காணொளிகளையும் நம்பவேண்டாம் என்றும் அவற்றை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் தொடர்பான சந்தேகத்திற்குரிய அல்லது போலியான தகவல்கள் இணையத்தில் தென்பட்டால், உடனடியாகத் தங்களின் அதிகாரபூர்வ தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி வழியாகத் தகவல் தெரிவிக்குமாறு உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்