திருவனந்தபுரம்: உயரதிகாரிகளின் அனுமதியின்றி பள்ளிக்கு விடுமுறை அறிவித்த முதல்வரைப் பொதுக் கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்தது.
இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் வட்டியூர்க்காவு பகுதியில் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
அண்மையில் ஒருநாள் அப்பள்ளியின் முதல்வர் ஜினில் ஜோஸ் திடீரென அப்பள்ளிக்கு விடுமுறை அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
அதனையடுத்து, அப்பள்ளிக்குச் சென்று சோதனையிட்ட துணைக் கல்வி அதிகாரி, பள்ளி மூடியிருந்ததைக் கண்டார்.
விசாரணையில், கேரள அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதற்காக திரு ஜோஸ் தமது பள்ளிக்கு விடுமுறை அளித்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கடமையிலிருந்து தவறியது போன்ற காரணங்களுக்காக அவரைப் பணியிடைநீக்கம் செய்து பொதுக் கல்வித் துணை இயக்குநர் உத்தரவிட்டார்.

