அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தனியார் தங்கச்சுரங்கம் செயல்படவுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் முதன்முதலாக தனியார் தங்கச்சுரங்கம் செயல்படவுள்ளது. இந்த தனியார் தங்கச்சுரங்கம் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1994ம் ஆண்டு, கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்தது.
இருப்பினும், தங்கம் இருப்பதை உறுதி செய்யும் ஆய்வை நடத்த பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை.
இதையடுத்து 2005ஆம் ஆண்டு சுரங்க கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. அதனால் மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது பெங்களூரை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய உரிமம் பெற்றது.
இருப்பினும், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அனைத்து அனுமதிகளும் ஜியோ மைசூர் சர்வீசுக்கு கிடைத்தது. 2021ஆம் ஆண்டு நிறுவனம் சோதனை தொடங்கியது.
“தற்போது 30,000 ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். இரண்டு ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்,” என்று ஜியோ மைசூர் சர்வீசஸ் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஆந்திர அரசாங்கம் சுரங்கம் குறித்து பொதுமக்களிடையே கருத்துகளை கேட்க உள்ளது. அதன்பின் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.
அனுமதி கிடைத்தவுடன் மூன்று மாதங்களுக்குள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளது நிறுவனம்.