புதுடெல்லி: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘பாலஸ்தீன்’ என்ற சொல் பொறிக்கப்பட்ட கைப்பையை நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி திங்கட்கிழமை (டிசம்பர் 16) நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி, குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள திங்கட்கிழமை நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
அப்போது, ‘பாலஸ்தீன்’ என்ற சொல்லுடன் பாலஸ்தீனச் சின்னங்களும் பொறிக்கப்பட்ட கைப்பையை தம்முடன் கொண்டு சென்றிருந்தார் பிரியங்கா காந்தி.
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் போராட்டங்களுக்கு எதிராக பிரியங்கா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அவர் கடுமையாகச் சாடினார்.
இஸ்ரேல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ‘இனப்படுகொலை’ என்று அவர் கூறினார்.
“இஸ்ரேல் அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து, அவற்றை நிறுத்த வலியுறுத்துவது அனைவரின் பொறுப்பு. அதேவேளை, இது இஸ்ரேல் குடிமக்களுக்கும் உலகின் அனைத்து அரசுகளுக்கும் உள்ள பொறுப்பாகும்,” என்று ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் பிரியங்கா பதிவிட்டார்.
இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்ற கைப்பை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

