காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி வதேரா, 52, வியாழக்கிழமை (நவம்பர் 28) பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மக்களவை நாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமது கையில் அரசியல் சாசனப் புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றார். அப்போது அவர் கேரளாவின் பாரம்பரிய ‘கசவுப் பட்டு’ சேலை அணிந்திருந்தார்.
தங்க இழைகள் கொண்டு கைத்தறியில் நெய்யப்படும் கசவுப் பட்டுச் சேலையை பண்டிகைக் கொண்டாட்டங்களின்போதும் முக்கிய விழாக்களின்போதும் கேரளப் பெண்கள் அணிவது வழக்கம்.
பிரியங்கா காந்தி நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தபோது தாயார் சோனியா காந்தியும் சகோதரர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும் உடன் சென்றனர்.
அப்போது, “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று பிரியங்கா கூறினார்.
அவர் பதவி ஏற்றதன் மூலம் மக்களவையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.
தமது சகோதரர் ராகுல் காந்தி விட்டுச் சென்ற கேரள மாநில வயநாடு மக்களவைத் தொகுதியில் இம்மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு நவம்பர் 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் வேட்பாளராக முதல்முறை தேர்தல் களம் கண்ட பிரியங்கா காந்தி, பல எதிர்பார்ப்புகளை மீறி வயநாட்டில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 931 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்றதைக் குறிக்கும் தேர்தல் ஆணையத்தின் சான்றிதழை காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தியிடம் புதன்கிழமை (நவம்பர் 27) வழங்கி வாழ்த்தினர்.
அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ள இக்கட்டான நிலையில் பிரியங்கா காந்தி எம்.பி. ஆகி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி இழந்த பெருமையை மீட்டு அக்கட்சிக்கு அவர் புத்துயிர் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.