பெங்களூரு: ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி வரை பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.
பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை வளாகக் கண்ணாடி மாளிகையில், கர்நாடக ஒலிம்பிக் சங்கம் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் 2025’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் சித்தராமையா, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும், அதன் வளர்ச்சிக்கு உதவிய அதிகாரிகளுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து, அனைத்துலக அளவில் கர்நாடக வீரர்கள் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில், மிகப்பெரிய பரிசுத் தொகையை முதல்வர் அறிவித்தார். அதன்படி, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி, வெள்ளி வென்றால் ரூ.4 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடின உழைப்பும், தெளிவான இலக்கும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தங்களது அரசு எப்போதும் முன்னணியில் இருக்கும்,” என்று கூறினார்.

