லக்னோ: அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கைப் பணத்தில் நடந்துள்ள முறைகேடுகள் அம்பலமானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து ஊழியர்களின் பின்னணி குறித்த தகவல்கள் நூறு விழுக்காடு துல்லியமாகச் சரிபார்க்கப்படும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகவலைக் கோவில் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பக்தர்களின் காணிக்கை பணத்தைத் திருடிய வழக்கில் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் காவல்துறை கடந்த வாரம் சுமார் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, கோவில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு புதிதாகத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஜிதேந்திர மிஸ்ரா தலைமையில் விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஊழியர்களின் சுயவிவரங்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட அதிகாரபூர்வ பின்னணி சரிபார்ப்புச் சான்றிதழ், நற்சான்றிதழை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகச் சீரமைப்பின் ஒரு பகுதியாக, கோவில் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் சிலர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அறக்கட்டளை எடுக்கும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து முடிவுகளுக்கும் அனைவரும் கட்டுப்பட்ட வேண்டும் என்றும் தற்போது கோவிலில் வழிபாடுகள், தரிசனம், நன்கொடை வசூல் அனைத்தும் வழக்கம்போல் சீராக நடைபெற்று வருகின்றன என்றும் அறக்கட்டளை உறுப்பினர் தினேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக, இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் காணிக்கையாக அளிக்கப்பட்ட வெள்ளிப் பொருள்களில் போலி வெள்ளி கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கக் கிரீடம் ஒன்று மாயமாகிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
