புதுடெல்லி: இந்திய முப்படைகளின் போர்த்திறனை அதிநவீன நிலைக்கு உயர்த்தி மேலும் பலப்படுத்தும் வகையில், ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்கள், தற்காப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லியில் தற்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அணுசக்தி, வேதிப் பாதிப்புகளைக் கண்டறியும் சிறப்பு வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி அமைப்புகள், அதிக நடமாட்ட வாகனங்கள், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகத் தற்காப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படை விமான நிலையங்களில் உள்ள பழைய ‘ரேடார்’களுக்குப் பதிலாக அதிநவீன ‘ஆருத்ரா’ ரேடார்கள் நிறுவப்பட உள்ளதாகவும், போர்க்கப்பல்களுக்கான இயந்திர அமைப்புகளும் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.
போர் விமானங்களின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் சாதனங்கள், எதிரிகளின் தொடர்புகளைத் துண்டிக்கும் ஜாமர் அமைப்புகள் வாங்கப்பட உள்ளதாகவும் இந்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின்கீழ், இக்கொள்முதலில் ஏறத்தாழ 98 விழுக்காட்டுப் பொருள்கள் இந்திய உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்தே பெறப்பட உள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் துறையைப் பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காப்புத்துறை ஒப்புதல்களின் ஒரு முக்கியமான அம்சம், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டுக் கொள்முதலை ஊக்குவிப்பதும் அரசின் தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) முயற்சிக்கு ஊக்கமளிப்பதும் ஆகும்.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “வழங்கப்பட்ட மொத்தத் தேவை ஏற்பில், ஏறத்தாழ 98 விழுக்காடு கொள்முதல்கள் இந்தியத் தொழில்துறையில் இருந்தே செய்யப்படும். இது இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் உள்ள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது,” என்றார்.


