இந்தியாவில் உற்பத்தி, உலகிற்கு ஏற்றுமதி: உலக முதலீட்டாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் உற்பத்தி, உலகிற்கு ஏற்றுமதி: உலக முதலீட்டாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

2 mins read
9d6fd722-048b-4eda-a7f7-de4624fb027e
6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டத்திலும், முதலீடுகளை ஈர்க்க முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். - படம்: ஏபி
Google News Preferred Icon

வாஷிங்டன்: இந்தியாவில் தொழில்களைத் தொடங்கி உற்பத்தியைப் பெருக்குவதோடு, இங்கிருந்து அனைத்துலகச் சந்தைகளுக்கான தயாரிப்புகளை உருவாக்க முன்வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோவில், நடைபெற்ற  தொழிலதிபர்கள் முதலீட்டாளர்களுடனான உயர்மட்ட வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய நிதியமைச்சர், உலக அளவில் விநியோகச் சங்கிலிகள் மறுசீரமைக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில், அனைத்துலக நிறுவனங்களுக்கு இந்தியா மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்பை வழங்கி வருகிறது என்றார்.

‘‘இந்தியா என்பது வெறும் மிகப்பெரிய பயனீட்டாளர் சந்தை மட்டுமல்ல என்றும், அது அனைத்துலக அளவில் இயங்குவதற்கான வலுவான தளமாக உருவெடுத்துள்ளது,’’ என்றார் திருவாட்டி நிர்மலா.

இந்தியாவில் உள்ள பொறியியல் திறமைகள், விரிவடையும் தொழிற்துறை வசதிகள், அதிநவீன தொழில்நுட்ப சூழல் ஆகியவை அமைச்சர் உரையில் முக்கிய இடம்பிடித்திருந்தன. 

அவற்றை விரிவாகச் சுட்டிக்காட்டிய திருவாட்டி நிர்மலா, ‘‘உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், பாதுகாப்புத் துறை உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் விரிவான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

‘’எனவே, இந்த வாய்ப்புகளை உலக நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதார், யுபிஐ போன்ற இந்தியாவின் மின்னிலக்க பொது உள்கட்டமைப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக பகுதி மின்கடத்திகள், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், குஜராத்தில் அமைந்துள்ள ‘கிஃப்ட் சிட்டி’ அனைத்துலக நிதியியல் நடுவமாக உருவெடுத்து வருவதைச் சுட்டிக்காட்டிய திருவாட்டி நிர்மலா, உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியில் பங்கேற்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஏற்றுமதிசிகாகோமுதலீடு