மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த பேராசிரியர்

மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த பேராசிரியர்

1 of 2
படம்: இந்திய ஊடகம்
படம்: இந்திய ஊடகம்

24 Dec 2023 - 12:29 pm

1 mins read

கான்பூர்: மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மயங்கி விழுந்து மூத்த பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்தார் திரு சமீர் காண்டேகர், 53.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று முன்னாள் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று, மேடையில் உரையாற்றினார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வியர்த்துக்கொட்டியதாக ஐஐடி கான்பூர் இயக்குநர் அபய் கரந்திக்கர் குறிப்பிட்டார்.

அதனைக் கண்டதும் மற்றவர்கள் உதவிக்கு விரையும் முன்னரே, அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

திரு சமீர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குமுன் திரு சமீருக்கு ரத்தக் கொதிப்பு பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது.

மாணவர் விவகாரத் துறைத் தலைவராகவும் இருந்த திரு சமீர், தலைசிறந்த ஆசிரியர், ஆய்வாளர் என்று திரு அபய் குறிப்பிட்டார்.

திரு சமீரின் மகன் பிரவா காண்டேகர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் என்றும் அவர் வந்த பிறகே திரு சமீரின் இறுதிச் சடங்குகள் இடம்பெறும் என்றும் திரு அபய் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
பேராசிரியர்மாரடைப்புஉயிரிழப்பு